நத்தம் மந்தையம்மன் கோயிலில் பூக்குழி
நத்தம்: -நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு சுவாமி, மந்தையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையொட்டி அழகர்கோவில் மலையிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகங்களுடன் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சுவாமி நல்லாகுளம் சென்று அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்தவரப்பட்டது. பொங்கல் வைத்து அம்மன்குளம் சென்று தீர்த்தம் எடுத்து வர அன்றிரவு மகளிர் அமைப்பு சார்பாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதன் பின்னர் கிடாய் வெட்டுதல், தீச்சட்டி எடுத்து வருதல், பக்தர்கள் பூக்குழி இறங்குதல்,கரகம் அம்மன்குளம் செல்வது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.