ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று முதல் துவங்கி மார்ச் 19 வரை 13 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் மகா கணபதி பூஜை, புண்யாக வாசனம், காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் மாரியம்மன் கோவில் தெரு சாவடியில் இருந்து கொடிபட்டம் புறப்பட்டு முக்கிய வீதிகள் சுற்றி கோயில் வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கொடிபட்டம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்கு அம்மன் மண்டபம் எழுந்தருளும், இரவு 10:00 மணிக்கு வீதி உலாவும் நடக்கிறது. மார்ச் 18 மதியம் 1:35 மணிக்கு பூக்குழி இறங்குதலும், மார்ச் 19 மதியம் 12 :30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது.