கோயிலில் கண்ட இடத்தில் விளக்கேற்ற வேண்டாம்: பக்தர்களுக்கு அறிவுரை
திருவாடானை: கோயிலில் கண்ட இடங்களில் விளக்கேற்ற வேண்டாம், கலப்பட நெய் எண்ணெய் விளக்கை தவிர்க்கவும் என பக்தர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிரதோஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக கோயிலின் பல்வேறு பகுதிகளில் விளக்குகளை ஏற்றி வருகின்றனர். இதில் சமீப காலமாக துாண்கள், சிலைகள் இருக்கும் இடங்களில் தீபங்களை ஏற்றி வைப்பதால் கருங்கற்கள் சேதமடைவதோடு, கோயில் வளாகம் முழுவதும் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படுகிறது. இது கோயிலின் புனிதத்தையும், பழமையையும் சிதைப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது:
பக்தர்கள் விளக்குகளை ஏற்றுவதற்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஏற்ற வேண்டும். கலை நயமிக்க துாண்கள் அருகில் விளக்கு களை வைத்து அதன் அழகை கெடுக்கக் கூடாது.
குறைந்த விலையில் விற்கும் கலப்பட எண்ணெய்களை கொண்டு விளக்கேற்றுவதை தவிர்க்க வேண்டும். இது கோயிலுக்குள் அதிக புகையை உண்டாக்கி பழமையான ஓவியங்கள் மற்றும் சிலைகளை பாதிக்கும்.
சுத்தமான நல்லெண்ணெய் மட்டுமே பயன் படுத்த வேண்டும். இறைவனுக்கு தீபம் ஏற்றுவது சிறப்பு தான். ஆனால் அது கோயிலின் துாய்மையை கெடுப்பதாக இருக்க கூடாது என்றனர்.