ராம நவமி; கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள, ராமசாமி கோவில் தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 19ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இன்று (27ம் தேதி) ஸ்ரீ ராமநவமியான அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை 9: 00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெற்றது. தேரில் சீதா ராமர் லெட்சுமணர் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ராமா ராமா என முழக்கமிட்டபடி ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். 28ம் தேதி காலை திருமஞ்சனமும், மாலை புஷ்பகயாகமும், த்வாதச ஆராதனமும், இரவு சப்தாவர்ணமும், 29ம் தேதி காலை ராஜ உபசார திருமஞ்சனமும், ஸ்ரீ ராமபிரானும், சீதையும் திருக்கல்யாண சேவையில் புஷ்பக விமானத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.