காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, கடந்த 22ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவும், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன்படி, ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு கைலாசபீட ராவண வாகனத்தில் ஏகாம்பரநாதர் உலா வந்தார். இதில், ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை, 63 நாயன்மார்கள் உத்சவம் விமரிசையாக நடந்தது.
இன்று ஏழாம் நாள், பிரபல உத்சவமான தேரோட்டம் நடைபெற்றது. முன்னாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்மன் எழுந்தருள பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். விழாவில் காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். 10ம் நாள் உத்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாணம் வரும் 31ம் தேதி இரவு நடக்கிறது.