காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மகோன்னத பாராயணம்: காஞ்சி மடாதிபதிகள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத பாராயண நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கரமடத்தின் சீனியர் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும், சென்னை ஸ்ரீ காமாக்ஷி ஸ்ரீ வித்யா ஸமிதியும் இணைந்து உலக நலன் வேண்டி நடத்தும், ‘காமாக்ஷி தாய்மடியில்’ என்ற மகோன்னத பாராயண நிகழ்ச்சி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இன்று மதியம் 2:00 மணிக்கு நடைபெற உள்ளது. காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2,000 மாணவியர் பங்கேற்று பாராயணம் செய்ய உள்ளனர். உலக நன்மைக்காக நடைபெறும் இந்த பாராயணத்தில், பக்தர்களும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.