குன்றத்து கோயிலில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 5ம் நாள் திருவிழாவாக நேற்று சுவாமி கை பாரம் நிகழ்ச்சி நடந்தது.
கோயிலில் மார்ச் 23ல் துவங்கிய பங்குனி திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
நேற்று இரவு 2 டன் எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சீர்பாதங்கள், கிராமத்தினர், பக்தர்கள் உள்ளங்கைகளில் வாகனத்தை தலைக்குமேல் துாக்கி கொண்டு கொத்தாளமுக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர்.
இந்த கைபாரம் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி 5ம் திருவிழா அன்று மட்டுமே நடக்கும். தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மார்ச் 29) சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப். 2ல் சூரசம்ஹாரம், 3ல் பட்டாபிஷேகம், 4ல் திருக்கல்யாணம். 5ல் தேரோட்டம், 6ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.