உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்

கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்

கொப்பால் மாவட்டம் கனககிரியில் உள்ளது கனகசலா லட்சுமி நரசிம்மர் கோவில். விஜயநகர பேரரசர்கள் காலத்தில், கனககிரி நாயக்கர்களால் கட்டப்பட்ட இக்கோவில், கட்டட கலைக்கு சிறந்து எடுத்துக் காட்டாக உள்ளது. விஷ்ணுவுக்கு இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கனககிரி என்றால் தங்க மலை, இறைவனின் குன்று என்று பொருள்.

கோவிலுக்குள் மூன்று கோபுரங்கள் தங்க நிறத்தில் இருப்பது பக்தர்களை வெகுவாக கவர்கிறது. கோவிலில் உள்ள ஒவ்வொரு துாணிலும் பொறிக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மன்னர்களின் வாழ்க்கை முறையை எடுத்துச் சொல்கின்றன. கருவறையில் இருக்கும் லட்சுமிநரசிம்மர், லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.

துாண்களை தாங்கி நிற்கும் மேல் பகுதியில், ராமர், சீதா, லட்சுமண், ஹனுமன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் பதிக்கப்பட்டு உள்ளன. சயன நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் விஷ்ணு சிலையும் பக்தர்களை வெகுவாக கவர்கிறது. கோவிலில் உள்ள மூன்று பழமையான கல்வெட்டுகளில், மன்னர்கள் காலத்தில் எழுதிய, கன்னட எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

கோவிலில் இருந்து, 300 மீட்டர் துாரத்தில், சிறிய ஓடையில் தண்ணீர் ஓடுகிறது. இங்கு குளித்து விட்டு கடவுளை தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம் பிக்கையாக உள்ளது. தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், பக்தர்கள், மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். அவர்கள் தங்குவதற்கு வசதியாக, கோவில் வளாகத்திலேயே அறைகள் கட்டப்பட்டு உள்ளன.

கோவில் நடை தினமும் காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரையும்; மாலை, 4:00 முதல், 8:00 மணி வரையும் திறந்து இருக்கும். நரசிம்ம ஜெயந்தி முக்கிய திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

எப்படி செல்வது?


1. பெங்களூரில் இருந்து கனககிரி 382 கி.மீ., துாரத்தில் உள்ளது.
2. ரயிலில் சென்றால் கொப்பால் அல்லது முனிராபாத் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.
3. மெஜஸ்டிக்கில் இருந்து கனககிரிக்கு அரசு பஸ் சேவை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !