சிவ விஷ்ணு கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
திருவள்ளூர்: திருவள்ளூர் சிவ விஷ்ணு கோவிலில், பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவிலில் நேற்று, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. நேற்று காலை, பூங்குழலி அம்பாள் – புஷ்பவனேஸ்வரர் மற்றும் பத்மாவதி தாயார் – சீனிவாச பெருமாள் ஆகியோருக்கு, திருக்கல்யாணம் நடந்தது. மேலும், சுப்ரமணியருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திருவள்ளூர், காக்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்: திருத்தணி திருத்தணி காந்திநகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம், 26ம் தேதி நடந்தது. நேற்று, உற்சவர் அர்ஜுனனுக்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். வரும் 12ம் தேதி தீமிதி விழாவும், மறுநாள் தர்மர் பட்டாபிஷேகத்துடன், இந்தாண்டிற்கான தீமிதி விழா நிறைவடைகிறது. கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில், தாட்சாயிணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது. அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நடந்த திருமண நிகழ்வை காண, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.