உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் கோலாகலம்: காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் கோலாகலம்: காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, இன்று அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு, நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சார்பில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில்காவடிகளும், 260 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 260 பால்குட அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் தங்க தேரில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும், 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.


திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். அதேபோல், திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில், உற்சவர் சிவகாமி சுந்தேரஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை பூண்டி ஒன்றியம் தேவந்தவாக்கம் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அதேபோல், தொம்பரம்பேடு கால பைரவர் கோவில், ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில், செட்டித்தெருவில் உள்ள விக்னேஷ்வர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !