உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டம் இறங்கி அம்மன் கருவறை வாயிலில் வெற்றிக்கு பிரார்த்தனை செய்த முருகன்

குண்டம் இறங்கி அம்மன் கருவறை வாயிலில் வெற்றிக்கு பிரார்த்தனை செய்த முருகன்

திருப்பூர்: பா.ஜ. மாநில தலைவராக இருந்த முருகன், கடந்த முறை தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார். இவரை விட, 1,473 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்ற, தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கயல்விழி வெற்றி பெற்றார். தேர்தலில் வென்ற இவருக்கு மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தோல்வியடைந்த முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கியது பா.ஜ. தற்போது, தி.மு.க. வில் கயல்விழிக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத நிலையில், முருகன் மீண்டும் தேர்தலில் போட்டியிட போகிறார். அ.தி.மு.க. திருப்பூர் அவிநாசி (தனி) தொகுதியை பா.ஜ. வுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், இத்தொகுதியில் எல்.முருகன் போட்டியிட போவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு சென்ற முருகன், காலை 9:30 மணிக்கு அம்மனை பயபக்தியுடன் வேண்டி குண்டம் இறங்கினார். சில நிர்வாகிகளுடன் கோவில் வளாகத்தை வலம் வந்த அவர், அம்மன் கருவறை முன், நுழைவு வாயிலில் அமர்ந்து சில நிமிடம் ஆழ்ந்து, அம்மனை மனமுருகி தனியே வேண்டினர்; பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முருகன், இம்முறை குண்டம் இறங்கி தேர்தல் வேலைகளை, பிரசாரத்தை துவக்கியுள்ளதால் நிச்சயம் வெற்றி பெற்று, சட்டசபைக்குள் நுழைவார் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !