திருத்தணி முருகன் கோவிலில் ஆற்று உற்சவ விழா
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் சார்பில் நேற்று நடந்த ஆற்று உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாதத்தில் நடக்கும், ஆற்று உற்சவ திருவிழா ஆண்டுதோறும் திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆற்று உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, மதியம், 1:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக மாட்டு வண்டியில் பொதட்டூர்பேட்டை ரோடு, தெக்களூர் பகுதியில் உள்ள நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்டத்தில் உள்ள மண்டபத்திற்கு, மாலை, 5:00 மணிக்கு சென்றடைந்தார். பின் அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளினார். மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நந்தி ஆற்றில் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆற்று உற்சவ திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.