புனித வெள்ளி: சிலுவைபாதை, மலையேற்றத்தில் ஈடுபட்ட மக்கள்
ஊட்டி: பந்தலூரில் புனித வெள்ளியை முன்னிட்டு, சுமார் 500 அடி உயரம் உள்ள குருஸ்மலையில், சிலுவையை சுமந்தபடி மலை ஏறி பிரார்த்தனை செய்தனர்.
பந்தலூர் பஜார் மற்றும் கிளன்ராக் வனப்பகுதியை ஒட்டி, சுமார் 500 அடி உயரம் உள்ள சாமியார் மலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித வெள்ளி நாளன்று, பந்தலூர் புனித சவேரியார் தேவாலயம் சார்பில், பங்கு மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் இணைந்து, சிலுவையை சுமந்தபடி, சிலுவை பாதை நடந்து செல்வார்கள். இன்று நடந்த நிகழ்ச்சியில் காலை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, பின்னர் சிலுவை சுமந்தபடி ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலையில் நடந்தும், 500 அடி உயரம் உள்ள மலையில், ஏறி மலை உச்சியில் உள்ள சிலுவை முன்பாக, பாதர் பெனடிக் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்தபடி மலையேற்றத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதியம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதி பங்கு மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.