திருமலையில் குடிசை நன்கொடை கொள்கை
திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் குடிசை நன்கொடை கொள்கை என்பது திருமலையில் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கும் வசதிகளை மேம்படுத்த உருவாக்கப்படுபட்ட ஒரு திட்டமாகும்.
திருமலையில் நிலப்பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் காரணமாகப் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, பழைய மற்றும் சிதிலமடைந்த தங்கும் விடுதிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகளைக் கட்ட நன்கொடையாளர்களை டிடிடி ஊக்குவிக்கிறது. ஒரு தங்கும் விடுதி அல்லது காட்டேஜ் கட்டுவதற்கான முழுச் செலவையும் (கட்டுமானப் பொருட்கள் முதல் தொழிலாளர் கூலி வரை) நன்கொடையாளரே ஏற்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அந்த விடுதி முழுமையாக டிடிடியிடம் ஒப்படைக்கவேண்டும். அதன் பராமரிப்பு மற்றும் மேலாண்மை பணிகளைத் தேவஸ்தானமே கவனித்துக் கொள்ளும்.இந்தக் கொள்கையின் கீழ் நன்கொடை அளிப்பவர்களுக்குச் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன:அந்தத் தங்கும் விடுதிக்கு நன்கொடையாளர் விரும்பும் பெயரையோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் பெயரையோ சூட்டிக் கொள்ளலாம்.ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் (பொதுவாக 30 முதல் 60 நாட்கள் வரை) அந்த விடுதியில் நன்கொடையாளரும் அவரது குடும்பத்தினரும் முன்னுரிமை அடிப்படையில் இலவசமாகத் தங்க அனுமதி அளிக்கப்படும்.
தற்போது சுமார் 24 விடுதிகள் இக்கொள்கையின் கீழ் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இது டிடிடிக்கு நிதிச் சுமை இல்லாமல் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அறைகளை வழங்க உதவுகிறது. இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் டிடிடியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோ விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் செல்கான் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட புதிய சிம்ம நிலையம் தங்கும் விடுதியை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுமார் 200 அறைகள் கிடைக்கும்.