உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 31ம் தேதி, திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும், பெண்கள் மஞ்சள், வேப்பிலை நீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று மதியம் கோவில் வளாகத்திலுள்ள கொடிமரத்திற்கு, பல்வேறு திரவியங்களில் மகா அபிஷேகமும், கொடிக்கு யாக சாலை பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, மஞ்சள் வண்ணத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் திருஉருவம், சூரியன், சந்திரன் என வடிவமைக்கப்பட்ட திருவிழா கொடி, கொடி மரத்தில் பக்தர்களின் ‘‘ஓம் சக்தி, பராசக்தி ’’ கோஷம் முழங்க திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
தொடர்ந்து, மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்றத்தை தொடர்ந்து, திருக்கம்பத்தின் மீது பூவோடு வைத்து வழிபடும் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து வழிபட்டு வருகின்றனர். வரும், 7ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஏப்., 8ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்., 9ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது. வரும் 10ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. 11 ம் தேதி காலை, 8:15 மணிக்கு கொடியிறக்கம், 11;00 மணிக்கு, மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, ஏப்., 3ம் தேதி முதல், தினமும் மாலை, 7:30 மணிக்கு, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். மேலும், கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.