திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. நாளை (ஏப். 4) மதியம் 12:00 முதல் மதியம் 12:20 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
பச்சை குதிரை ஓட்டம் பங்குனித் திருவிழாவின் 11ம் நாளான இன்று மதியம் 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நிலையில் கிரி, ரத வீதிகளில் பச்சைக் குதிரை ஓட்டம் நடந்தது. கோயில் காவல் மிராசு கள்ளத்தேவர் வகையறா பங்காளிகள் சார்பில் பச்சைக் குதிரைக்கு கவாளக்களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
பட்டாபிஷேகம் இரவு 7:15 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமியின் கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், சேவல், மயில் கொடிகள் சாத்துப்படி செய்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டினர். கன்யா லக்னத்தில் பட்டாபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது.