வேப்பமரம் விழுந்து மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் உடைந்தது
சோழவந்தான்: வேப்பமர கிளைகளை அகற்றும் பணியின் போது தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் சேதம் அடைந்தது.
பழமையான இக்கோயிலின் கொடிமரம் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. கோயில் வளாகத்தில் தென்னை,வேம்பு உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. மழைக்காலங்களிலும், காற்று வேகமாக வீசும் போதும் அடிக்கடி பல மரங்கள் சாய்ந்து விழுவது வாடிக்கை. இதில் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையும் இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு தென்னை மரம் விழுந்தது. இதனால் கோயில் சார்பில் ஆபத்தான நிலையிலுள்ள மரம், கிளைகளை அகற்றும் பணி நடந்தது. கொடி மரத்திற்கு அருகே வேப்ப மரத்தின் கிளைகளை அகற்றும்போது வெட்டப்பட்ட பகுதி விழுந்ததில் கொடிமரம் அடியோடு உடைந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவனமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் விபத்து நடந்து விட்டது. கூடிய விரைவில் சீரமைக்கப்படும்’’ என்றனர்.