இன்று ஈஸ்டர் திருநாள்: உயிர்த்தெழுந்தார் பரமபிதா.. சர்ச்களில் சிறப்பு ஆராதனை
ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவதெல்லாம், இயேசு உயிர்த்தெழுந்த சம்பவம் தான். யூதர்கள், கிறிஸ்தவர்களுக்கு ஆதி பிதாவாக ஆதாம் இருந்ததாக நம்புகின்றனர். அவரது வழித்தோன்றலாக 60வது தலைமுறையில் கடவுளின் குமாரனாக, தீர்க்கதரிசியாக, ரட்சகராக, உலகின் மையமான ஆசியா கண்டத்தில் இஸ்ரேல் நாட்டில் தோன்றியவர் இயேசுபிரான். சாதாரண மனிதனை போல் பிறக்காமல், கடவுளின் பரிசுத்த ஆவியால், கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தார். அற்புதங்கள் பல செய்து, நீதி, நேர்மை, நியாயத்துக்காக பாடுபட்டார். மனிதனுக்கு பரிசுத்தம் என்றால் என்ன என்று கற்பித்து கொடுத்த, அந்த பரிசுத்தமான உத்தமருக்கு, உலகம் அளித்த பரிசோ மரணம். அதுவும் சாதாரண மரணமல்ல, கை கால்களை சிலுவையில் அடித்து அவமானப்படுத்திக் கொன்றனர். தான் சந்தித்த சாவை, சாகடித்து வெற்றி கண்ட நிகழ்வையே ஈஸ்டர் ஆக, உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுந்த நிகழ்வுக்கு, 333 ஆண்டுகளுக்குப் பின் உலக வரலாறே அவருக்கு கீழ்படிந்தது. கி.மு., கி.பி.,என்று இயேசுவின் பிறப்பை மையமாக வைத்து இன்று உலகம் செயல்பட்டு வருகிறது. இயேசு, உலகிற்கு தன்னையே அர்ப்பணித்த கடவுளாக இன்றும் ஜீவிக்கிறார். இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நன்னாளில் அவரது போதனைகளைப் பின்பற்றி நடக்க உறுதி கொள்வோம்.