தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நாளை இரவு மின் அலங்கார தேர்பவனி நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி, கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தாண்டிற்க்கான திருவிழா கடந்த 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மன் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் இளைஞர்களே வீதி உலா சென்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதலே தாயமங்கலத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு பொங்கல் வைத்து தீச்சட்டிகள், ஆயிரம் கண் பானை,கரும்பாலை தொட்டில், பால்குடங்கள் போன்றவற்றை ஏந்தி கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் ஆடு,கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் கோயிலில் அதிகளவு கூட்டம் இருந்ததையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மானாமதுரை,இளையான்குடி பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.இன்று இரவு 7:00 மணிக்கு மேல் மின் அலங்கார தேரோட்டம்நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை,இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் கிராம மக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.