உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரியில் குவியும் பக்தர்கள்!

கன்னியாகுமரியில் குவியும் பக்தர்கள்!

கன்னியாகுமரி : சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்குப் பின் கன்னியாகுமரிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இறண்டு லட்சத்தைக் கடந்தது. அய்யப்ப பக்தர்கள் வரும் வாகனங்களால் கன்னியாகுமரியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.கடும்விரதம் இருந்து சபரிமலை அய்யப்ப சுவாமியைத் தரிசிக்க வரும் அய்யப்ப பக்தர்களின் புனித யாத்திரை பயணத்திட்டத்தில் கன்னியாகுமரிக்கு முக்கிய இடமுண்டு. சுற்றுலாத் தலமாகவும், புண்ணியத் தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சியினைக் கண்டு ரசிக்கும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து எலக்ட்ரானிக் பொருள்கள், கடல்சிப்பி பொருட்கள், துணிவகைகள் போன்றவற்றை வாங்கிச் செல்கின்றனர்.அய்யப்ப பக்தர்கள் வருகை: கடந்த இரண்டு மாதங்களாக அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மகரஜோதி தரிசனத்திற்குப் பின்,கடந்த இரண்டு நாட்களாக கார் மற்றும் வேன், பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை இரண்ட லட்சத்தை தாண்டியது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு பக்தர்களின் அண்ணிக்கை அதிகமாக காணப்படும்.களைகட்டிய வியாபாரம்: பக்தர்களின் வருகையால் சன்னதி தெரு, கடற்கரை சாலை, காந்திமண்டப சாலை, முக்கடல் சங்கம சாலை, பார்க்வியூ பஜார் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமின்றி சீசனுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் பிளாட்பார கடைகள், உருட்டுவண்டி உணவகங்கள், கையேந்தி பவன் என கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் வியாபாரம் களைகட்டி காணப்படுகிறது.

பகவதியம்மன் கோயில்:கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவதியம்மனை வழிபட்டனர். மேலும் காசி விஸ்வநாதர் கோயில், குகநாதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

படகுத் துறையில் பக்தர்கள்:கன்னியாகுமரிக்கு வரும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடுகின்றனர். இதனால் காலையில் இருந்தே பூம்புகார் படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.பக்தர்களின் வசதிக்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மூன்று படகுகளும் இடைவிடாமல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்டுள்ளனர்.

கழிப்படமாக மாறிய கடற்கரை: பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்டை வசதிகள் போதுமானதாக இல்லாததால் கடற்கரையிலும், சாலையோரத்திலும் இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். இதனால் கன்னியாகுமரியில் பல இடங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள், டீ கப் போன்றவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. வாகன நெருக்கடி: கடந்த இரண்டு நாட்களில் கன்னியாகுமரிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வாகன நெருக்கடி உள்ளது. இதில் விவேகானந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரை சாலையின் இருபுறங்களிலும் குறுகலான சாலைகளிலும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கன்னியாகுமரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்ஜேன் ஒயிஸ்லிராஜ் தலைமையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.20ம் தேதியுடன் சீசன் நிறைவடைகிறது:இரண்டு மாதங்களுக்கும் மேலாக கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் சீசன் களைகட்டியது. இந்த 20ம் தேதியுடன் சீசன் முடிவடைவதோடு, பள்ளி, கல்லூரி திறப்பதால் கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !