மானாமதுரை மாரியம்மன் கோயில் புதிய ரதம் சிம்ம வாகனம் வெள்ளோட்டம்
மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு மாரியம்மன் கோயில் புதிய ரதம், சிம்ம வாகன வெள்ளோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மற்றும் பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் முளைப்பாரி உற்சவம்,பூக்குழி இறங்கும் விழாக்களின் போது அம்மன் வாகனத்தில் வீதி உலா வருவது வழக்கம். ரதம் மற்றும் சிம்ம வாகனம் இல்லாத நிலையில் சில மாதங்களாக அரியலூர் மாரியம்மன் அன்னதான குழுவினர் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் புதிய ரதம் மற்றும் சிம்ம வாகனம் செய்யும் பணி நடைபெற்றது. நேற்று மாலை மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன் புதிய ரதம் மற்றும் சிம்ம வாகனத்தில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து புதிய ரதத்தை பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியே கன்னார் தெரு மாரியம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றனர். பின்னர் அம்மனுக்கு, அபிஷேக, ஆராதனை, பூஜை, தீபாராதனை நடைபெற்றது.