உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரேமலதா வெற்றிக்காக விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு யாகம்

பிரேமலதா வெற்றிக்காக விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு யாகம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா வெற்றி பெற, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு யாகம் செய்யப்பட்டது.


கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இதற்கு முன்னதாக, 2021 தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அவர், டிபாசிட் இழந்தார். இந்நிலையில், 2006 தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய விஜயகாந்துக்கு வெற்றியை கொடுத்த விருத்தாசலம் தொகுதியில் பலம் வாய்ந்த கூட்டணியில் போட்டியிடும் பிரேமலதா, இம்முறை வெற்றியை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளார்.


அதன்படி, ‘காசியை விட வீசம் பெருசு விருத்தகாசி’ என்ற ஆன்மிக பெயருடைய விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் இன்று நடந்தது. இதற்காக, ராகு காலத்தில், காலை 7:30க்கு மேல், 9:00 மணிக்குள் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடும் வகையில், துர்க்கை அம்மனை வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். பின்னர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த பிரேமலதா, புதுமண தம்பதிகளுக்கு ஆசி வழங்கினார். முன்னதாக, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !