பாலமேடு பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா: பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன்
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மார்ச்.30 முதல் ஏப்.4 வரை அம்மனுக்கு மேளம் முழங்க முளைப்பாரி, தண்ணீர் செம்புடன் ஊர்வலமாக வந்து கும்மி அடித்து அபிஷேகம், வழிபாடு செய்தனர். ஏப்.5ல் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து, கண் திறப்பு விழா, சக்தி கரகம் அலங்காரம் செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் நகர்வலம் நடந்தது. ஏப்.6ல் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்னி சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் பத்ரகாளி அம்மனுக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்தனர். சக்தி கரகத்துடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முளைப்பாரி தோட்டத்தில் கரைத்தனர். தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.