கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா: கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் ஒன்றியம்,தொரவலுார் ஊராட்சியில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா, பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்தது. பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23ல் சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (7ம் தேதி) இரவு அவரபாளையத்தில் இருந்து சக்தி கரகத்துடன், மேள தாளங்கள் முழங்க சுவாமியின் படைக்கலம் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று மதியம் பொங்கல் விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று குடியேறிய ஏராளமான மக்கள், தங்கள் பூர்வீகக் கோவிலான கோட்டை முனியப்ப சுவாமி கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக 700-க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி சுவாமிக்குப் படைத்தனர்.
ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்ப சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 142 கிடாக்களின் இறைச்சி ராட்சத அண்டாக்களில் சமைக்கப்பட்டன. இதற்காகப் பக்தர்கள் வழங்கிய இரண்டு டன் அரிசி பயன்படுத்தப்பட்டது. 150 சமையல் பணியாளர்கள் இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டு, ஊர் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கறி விருந்துடன் அன்னதானம் வழங்கினர். நாளை மஞ்சள் நீராட்டுதல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளைத் தக்கார் சபரீஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.