மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகள், முளைப்பாரிகள் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 29ம் தேதி பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வந்தது. முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டு கோயில் முன்பாக தினம் தோறும் ஏராளமான பெண்கள் கும்மி பாட்டு பாடியும் அம்மனை வழிபட்டு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி ஓடுகளை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலை வந்தடைந்ததும் கோயில் முன்பாக முளைப்பாரிகளை மொத்தமாக வைத்து கும்மி பாட்டு பாடினர். இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தீச்சட்டிகளை சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனர். அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செர்டு பாண்டி,போதும் பொண்ணு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.