ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசுக்கனி தரிசனம் ஏராளமானோர் பங்கேற்பு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு விசுக்கனி தரிசனம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாத பிறப்பான சித்திரை 1 தினத்தில் விசுக்கனி தரிசனம் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் கணபதி ஹோமம், அஸ்டாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. மூலவர்கள் வல்லபை கணபதி, ஐயப்பன், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்கார கொழு மண்டபத்தில் பல்வேறு வகையான காய்கள், கனிகள், இயற்கை சார்ந்த உணவு பொருள்கள் ஏராளமான தட்டுகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. உற்ஸவர் ஐயப்பனின் தரிசனம் கண்ணாடியில் விழுமாறு காட்சிப்படுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்தனர். கோயில் தலைமை குருசாமி மோகன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டம் வழங்கப்பட்டது. புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.