பேரூர் பட்டீஸ்வரர் கோயில் வரலாற்று நுால் வெளியீடு
கோவை: கோவை நல்லறம் அறக்கட்டளை சார்பில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குறித்து ‘பேரூரா பட்டீசா’ (PERURA PATTEESA) என்ற நுால் வெளியீட்டு விழா, தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சக்தி சுகர்ஸ் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், சிறுதுளி நிறுவாக அறங்காவலர் வனிதாமோகன், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நுால் வெளியிடப்பட்டது.
விழாவில் சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள் பேசியதாவது: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல வரலாற்று நுால் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசத்துக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அதே அளவுக்கு தமிழ் மண்ணுக்கும் சிறப்புகள் உண்டு. தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கு, 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள் இருக்கின்றன. கொங்கு பகுதியின் சிறப்புகளை கொண்டது பட்டீஸ்வரர் கோவிலாகும். நம் முன்னோர் மிகவும் சிறப்பாக இந்த ஆலயத்தை அமைத்துள்ளனர். இந்த கோவிலின் வரலாற்று சிறப்புகளையும், சிற்ப வேலைப்பாடுகளையும் இந்த நுாலில் சிறப்பாக குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.