செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
செஞ்சி:செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கமலக்கண்ணியம்மன் கோவில் பாரம்பரிய தேர் திருவிழா வரும் 28 ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று பீரங்கிமேடு மகா மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. காலை 7 மணிக்கு கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. காலை 9 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகமும், கொடி மரத்திற்கு விசேஷ அபிஷேகமும் செய்தனர். 10 மணிக்கு கொடியேற்றமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் கமலக்கண்ணியம்மன் கோவில் அறங்காவலர் அரங்கஏழுமலை, மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு சாமி வீதி உலா, வாண வேடிக்கை, மேடை நாடம், இன்னிசை கச்சேரி, தெருகூத்து ஆகியன நடக்க உள்ளது. 28ம் தேதி காலை 6 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 2.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது.
அனுமதி இலவசம்: கமலக்கண்ணியம்மன் கோவில் செஞ்சி கோட்டை ராஜகிரி மீது உள்ளது. பல நுாற்றாண்டு பழமையான இந்த கோவிலில் விழா நடக்கும் நாட்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து ராஜகிரி கோட்டைக்குள் பொது மக்கள் சென்று வர இலவச அனுமதி வழங்கி வருகின்றனர். இந்த நடைமுறையின் படி நேற்று முதல் விழா முடியும் 29ம் தேதி வரை ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கி உள்ளனர்.