சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் வழிபாடு: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தளத்தில் நவகிரகங்களில் செவ்வாய் செல்வ முத்துக்குமார சுவாமி நோய் தீர்க்கும் தன்வந்திரி ஆகியோர் தனித்தனி சந்ததிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இங்கு சுவாமி அம்பாளை தரிசித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது முக்கிய திருவிழாவான நகரத்தார் வழிபாடு இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்க சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை தொடங்கிய காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் நேற்று மாலை வைத்தீஸ்வரன் கோவில் எல்லையை அடைந்தனர். அவர்கள் இன்று காலை கோவிலை வலம் தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவி வைத்து பூஜித்து குச்சியுடன் பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். பின்னர் சுவாமி அம்பாளை வழிபட்ட நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து சென்றனர். பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.