திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மங்கல இசை முழங்க திருக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் மணிகண்டன் குருக்கள், வல்மீகநாதன் குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், சரக ஆய்வாளர் கண்ணன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தார்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்.,25 ல் திருக்கல்யாணம், 29 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறும். தினமும் இரவில் சுவாமி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.