திருப்புல்லாணியில் ராமானுஜர் ஜென்ம நட்சத்திர உற்ஸவம்
திருப்புல்லாணி: 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விசிஷ்டாத்வைத தத்துவத்தை போதித்த வைணவ பெரியோருமான ராமானுஜரின் ஜென்ம நட்சத்திரம் இன்று திருப்புல்லாணியில் கொண்டாடப்பட்டது. வேதாந்த சங்கிரகம், கீதா பாஷ்யம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜரின் ஜெயந்தி விழா இன்று திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நடந்தது. ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. உற்ஸவர் மற்றும் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவர்கள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் ஆதிஜெகநாதபெருமாள், பத்மாஸ்னி தாயார், பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயனராமர் உள்ளிட்ட ஒவ்வொரு சன்னதியிலும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், ராமானுஜர் இயற்றிய பாடல்களும் பாடப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், தயிர் சாதம் வெண்பொங்கல் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இரவில் உற்ஸவர் ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு ரத வீதியில் உலா வந்தார்.