உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் 70 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் தேரோட்டம்: தேர்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

மானாமதுரையில் 70 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் தேரோட்டம்: தேர்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் 70 வருடங்களுக்குப் பிறகு 2 பெரிய தேர்களில் மீண்டும் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேர்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம், அன்னம்,கமலம்,குதிரை,யானை,ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். கடந்த 21ம் தேதி இந்த வருடத்திற்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 70 வருடங்களுக்கு முன்பு சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது போது சோமநாதர் சுவாமியையும், ஆனந்தவல்லி அம்மனையும் தனித்தனி பெரிய தேர்களில் இழுத்து வந்த நிலையில் ஒரு பெரிய தேர் சேதமடைந்ததை தொடர்ந்து 70 வருடங்களாக சோமநாதர் சுவாமி மட்டும் பெரிய தேரிலும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் வலம் வந்தனர்.இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக புதிதாக பெரிய தேர் செய்யும் பணிகள் நடைபெற்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் வருகிற 29ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தின் போது 70 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2 பெரியதேர்களில் சுவாமிகள் வலம் வர உள்ளனர்.இதையடுத்து நேற்று கோயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த 2 பெரிய தேர்களையும் சுத்தம் செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 70 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2 பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 2ம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு சோமநாதர் சுவாமி, பிரியாவிடையுடன் பூத வாகனத்திலும், ஆனந்தவல்லி அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !