அந்திகார நந்தி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த சென்னை காரணீஸ்வரர்
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி சேவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவது. கைலாயத்தில் சிவனை தரிசிப்பவர்களுக்கு, அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவர் என்பதால், அதிகார நந்தி என பெயர் வந்தது. சிவ ஆலயங்களில் அதிகார நந்திக்கென தனி வாகனம் உண்டு. திருவிழா காலங்களில் சிவபெருமான், இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார். அதிகார நந்தி சேவையை தரிசிக்கும் பக்தர்கள், கைலாசத்தில் சிவ தரிசனம் செய்வதற்கு சமமானது என்பது ஐதீகம்.
அதிகார நந்தி சேவை: சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில், சித்திரைப் பெருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி சேவை நடந்தது. காலை 5:45 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் காரணீஸ்வரர் கோபுர தரிசனம் தந்தார். பின், நான்கு மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன், மயில்வாகனத்தில் முருகப் பெருமானும், அன்ன வாகனத்தில் தனி அம்பாளும் வலம் வந்தனர். 25ம் தேதி மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும், 27ம் தேதி காலை 7:00 மணிக்க தேர் திருவிழா நடக்கிறது. அன்று இரவு 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருள்கிறார். வரும், 28ம் தேதி மாலை புஷ்ப விமானத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சுவாமி திருக்காட்சி அளிக்கிறார். வரும், 29ம் தேதி இரவு பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம், 30ம் தேதி நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவை நடக்கிறது.