உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உத்சவம் விமரிசை
உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட சேவை உத்சவம் நடந்தது.
உத்திரமேரூரில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டிற்கான சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து உத்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 6:00 மணிக்கு, சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு, சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, மலரால் அலங்கரிக்கப்பட்ட சுந்தர வரதராஜ பெருமாள் ஊர்வலமாக புறப்பட்டார். உத்திரமேரூர் பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, காலை 9:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.