தேவகோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 21 ந்தேதி கொடியேற்றம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மாலையில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வாகனங்களில் சுவாமி, அம்பாள் உட்பட அனைத்து சுவாமிகளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஐந்தாம் நாள் காலை தபசு காட்சி நடந்தது. மாலையில் ரெங்கநாதன் பெருமாள் கோயிலில் இருந்து பெருமாள் சிவன் கோயிலுக்கு எழுந்தருளினார். அலங்கார மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல, ரங்கநாத பெருமாள் கரங்களில் திருமாங்கல்யம் ஆசிர்வதிக்கப்பட்டு பெருமாள் முன்னிலையில் சேது சிவாச்சாரியார் திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரர் கரங்களில் ஆசி பெற்று மீனாட்சி அம்மனுக்கு அணிவித்ததை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதனையடுத்து பல் வித தீபாராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.