மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வரும் மே 1ம் தேதி வைகை ஆற்றில் வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் இறங்குகிறார். சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் இந்த வருடத்திற்கான விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயிலில் உள்ள முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார். விழாவின் துவக்கமாக வீர அழகரின் கைகளில் காப்பு கட்டப்பட்டது. சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை பூஜை நடைபெற்றது. எதிர்சேவை வருகிற 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடைபெறுகிறது.மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடம் பூண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து காலை 7:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் உள்ள வைகை ஆற்றில் இறங்குகிறார்.மறுநாள் இரவு வைகை ஆற்றில் நிலவொளியில் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.