உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா: அர்த்தநாரீசுவரர் கோலத்தில் அன்னை மீனாட்சி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா: அர்த்தநாரீசுவரர் கோலத்தில் அன்னை மீனாட்சி தரிசனம்

மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (அக். 12), அன்னை மீனாட்சி அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக். 11-ஆம் தேதி தொடங்கி அக். 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான நேற்று (அக். 11), அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.


தொடர்ந்து அக். 13-ஆம் தேதி மூன்றாம் நாள் கோலாட்டம், அக். 14-ஆம் தேதி நான்காம் நாள் பட்டாபிஷேகத் திருக்கோலம், அக். 15-ஆம் தேதி ஐந்தாம் நாள் தபசு அலங்காரம், அக். 16-ஆம் தேதி ஆறாம் நாள் ஊஞ்சல் உற்சவம், அக். 17-ஆம் தேதி ஏழாம் நாள் முத்தங்கி சேவை, அக். 18-ஆம் தேதி எட்டாம் நாள் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம், அக். 19-ஆம் தேதி ஒன்பதாம் நாள் சிவபூஜை அலங்காரம் ஆகியவற்றில் அன்னை மீனாட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அக். 20-ஆம் தேதி விஜயதசமி விழாவுடன் நவராத்திரி திருவிழா நிறைவடைகிறது.


நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருமுறை இன்னிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மேலும், நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அன்னை மீனாட்சிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !