திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற கார்த்திகை வனபோஜனம்! கஜ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!
திருமலை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாரம்பரியமான கார்த்திகை வனபோஜன விழா ஞாயிற்றுக்கிழமை பர்வேட்ட மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, மலையப்ப சுவாமி தங்கத் திருச்சியில் எழுந்தருளி வாகன மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். காலை 8.30 மணிக்கு சமர்ப்பணம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சிறிய கஜ வாகனத்தில் பர்வேட்ட மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தனியாக எழுந்தருளினர். தொடர்ந்து காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய விழா!
வரலாற்றுக் குறிப்புகளின்படி, 16-ம் நூற்றாண்டில் கவிஞர் அன்னமாச்சார்யரின் மூத்த மகன் பெத்த திருமலாச்சார்யரால் இந்த வனபோஜன விழா தொடங்கப்பட்டது. பின்னர் பல காரணங்களால் நிறுத்தப்பட்ட இவ்விழாவை, சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.
இதையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் சார்பில் பக்தி இசை நிகழ்ச்சிகள், ஹரிகதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வனபோஜன விழாவை முன்னிட்டு திருமலை கோயிலில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகளும் ஏராளமான பக்தர்களும் விழாவில் பங்கேற்று, இறைவன் முன்னிலையில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனர்.