சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா தேர் முகூர்த்தக்கால் பூஜை
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேர்த்திருவிழா 3 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தேர்த்திருவிழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதல் நிகழ்வாக தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத, முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர். காலை 9:00 மணியளவில் மலையில் இருந்து படிகள் வழியாக முகூர்த்தக்கால்கொண்டு வரப்பட்டு, அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, தேரின் நான்கு பக்கங்களிலும் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சுவாமி சன்னதியில் உள்ள மூலவர் வேல், முகூர்த்தக்காலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அனைத்து பூஜைகளும் நிறைவடைந்த பின், வேல் மீண்டும் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு மூலவரிடம் வைக்கப்பட்டது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.