ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம், பூவராகசுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 23 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7, ம் நாளான நேற்று நகர வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் தேர் திருவிழா நடந்தது. முன்னதாக அதிகாலை பூவராகசுவாமி, அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்புஅபிஷேகம், தீபாராதனை மற்றும் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் காலை 6:00 மணிக்கு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவியோடு திருத்தேர் வலம் வந்து தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதையொட்டி, நகரில் பல்வேறு சமூக நல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள சார்பில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவில் நாளை மதியம் மட்டையடி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.