காஞ்சிபுரம் நடவாவி கிணற்றில் நாளை வரதர் உத்சவம்
காஞ்சிபுரம்: நடவாவி கிணற்றில், வரதர் நாளை எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் கிராமத்தில், நடவாவி கிணறு உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று, வரதராஜ பெருமாள் உத்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். நடப்பாண்டிற்கான சித்ரா பவுர்ணமி விழா நாளை நடைபெற உள்ளது. இந்த உத்சவத்தை முன்னிட்டு காலை, 6:30 மணிக்கு புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளி மண்டகப்படி உத்சவம் நடைபெற உள்ளது. வாகை, துாசி, அப்துல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று விட்டு, இரவு 8:00 மணிக்கு அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இரவு 10:00 மணிக்கு நடவாவி கிணற்றில் எழுந்தருளில் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பொது மக்கள் தரிசனத்திற்கு பின், இரவு 11:00 மணிக்கு மேல் புறப்பட்டு கோவிலுக்கு சென்றடைய உள்ளார். இந்த விழாவை முன்னிட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையினர், நடவாவி கிணறு அருகே தடுப்பு அமைக்கும் பணி மற்றும் குளத்தை துாய்மைப்படுத்தி, துாண்களில் இருக்கும் சிற்பத் துாண்களுக்கு மஞ்சள், குங்குமம் இடும் பணியை செய்து வருகின்றனர்.