ஆத்மாவை உணர்வதே மகிழ்ச்சி: சுவாமி பரமார்த்தானந்தா ஆன்மிக சொற்பொழிவு
கோவை: ஆர்.எஸ்.,புரம் பாரதிய வித்யா பவனில் நடந்த, உத்தவ கீதை என்ற ஆன்மிக சொற்பொழிவில், அலை மற்றும் ஆழியின் மூலாதாரமாக தண்ணீர் விளங்குவதுபோல, ஜீவாத்மா, பரமாத்மாவின் மூலாதாரமாக ஆத்மா உள்ளது என, சுவாமி பரமார்த்தானந்தா தெரிவித்தார்.
ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம், பாரதிய வித்யா பவன் இணைந்து, உத்தவ கீதை என்ற தொடர் ஆன்மிக சொற்பொழிவில் நேற்று, சுவாமி பரமார்த்தானந்தா பேசியதாவது: அலை, கடலில் இருந்து எழுந்து மீண்டும் கடலிலேயே சங்கமிக்கிறது. பெயரால், அலை என்று உருவத்தால் கடல் என்றும் அழைக்கப்பட்டாலும், இரண்டிலும் இருப்பது நீர்தான். அதுபோலவே, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கிறார். நாம் இந்த உடலோ, மனதோ அல்லது புலன்களோ அல்ல. நாம் சாட்சியாக விளங்கும் ஆத்மா. இந்த உண்மையை உணர்ந்தவனே ஞானி ஆகிறான்.
ஞான யோகத்தின் மூலம் ஒருவன் தன்னை உணரத் துவங்கும் போது, ஈஸ்வரனும் தானும் ஒருவரே என்ற தெளிவு பிறக்கிறது. இந்த ஆத்மா ஆனந்த சொரூபம். ஒருவர் வெளியே தேடும் மகிழ்ச்சி தற்காலிகமானது.
ஆனால், தனக்குள்ளே தேடும் ஆத்மானந்தம் நிலையானது. யார் ஒருவன் புறப்பொருட்கள் மீதோ, உறவுகள் மீதோ, தன் மகிழ்ச்சிக்காக தங்கி இருக்கவில்லையோ, அவனே உண்மையான நிறைவை பெறுகிறான்.
செல்வம், செல்வாக்கு என எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் பலர். ஆனால், ஒரு கோவணம் மட்டுமே, அணிந்த துறவி எந்த வசதியுமின்றி மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணம் அவர் ஆத்மாவை உணர்ந்து இருப்பதுதான்.
என்னிடம் மனதை ஒப்படைத்த ஞானிக்கு, இந்த உலகத்தில் எந்த பதவியும், யோகசித்திகளும் தேவையில்லை. அவன் என்னுடனே கலந்திருக்கிறான் என்கிறார் பரந்தாமன். எனவே புற உலக ஓட்டத்தை நிறுத்தி, உலகத்தில் பயணிப்பதே மனித வாழ்வின் உண்மையான நோக்கம்,"என்றார்.