சிவகிரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா துவக்கம்
சிவகிரி: சிவகிரி திரவுபதை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. வரும் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகிரி திரவுபதிபதை அம்மன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு ஒன்பது யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று காலையில் அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, பூஜைகளுடன் துவங்கியது.இன்று நவக்கிரகஹோமம், பிரவேசபலி பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகம் நாள் வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், பூர்ணாகுதி, மருந்து சாத்துதல் நடக்கிறது.23ம் தேதி கும்பாபிஷேகம் நாளன்று காலையில் பிரம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்படுதல் நடக்கிறது.காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமானம், விநாயகர், மூலவருக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் மகா அபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள், பூசாரி மாரிமுத்து, விழாக் குழுவினர், மண்டகப் படிதாரர்கள் செய்து வருகின்றனர்.