ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் 852 ஆம் ஆண்டு சந்தனக்கூடு கொடியேற்று விழா கடந்த ஏப்., 28 அன்று நடந்தது. ஏப்., 18 அன்று தர்கா ஷெரிப் மண்டபத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் மவுலிது எனும் புகழ் மாலை ஓதப்பட்டு விழா துவங்கியது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள் பொதுமக்கள் தர்காவிற்கு வழிபாட்டிற்காக வந்தனர். இந்நிலையில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நேற்று மே 10., ஞாயிறு மாலை 5:00 மணி முதல் உலக நன்மைக்கான மவுலீது மற்றும் பாத்தியா ஓதப்பட்டது. மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் தலைமையிலான மார்க்க அறிஞர்கள் இரவு முழுவதும் ஓதினர். இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலிலிருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயரம் கொண்ட சந்தனக்கூடு ரதம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல, நாட்டிய குதிரைகள் நடனமாட, வானவேடிக்கைகள் முழங்க, புகழ் மாலை பாடல்களை பாடியவாறு குழு நடனம் ஆடியவாறு வந்தனர். 2 கி.மீ., ஊர்வலம் ஏர்வாடி தர்கா வளாகத்தை காலை 5:00 மணிக்கு வந்தடைந்தது. ஏராளமானோர் மல்லிகை சரங்களை சந்தன கூட்டு ரதத்தின் மீது தூவினர். பின்னர் உயர்ரக சந்தன கட்டைகளால் அரைத்தெடுக்கப்பட்ட சந்தனத்தை குடங்களில் கொண்டு வந்து புனித மக்பராவில் பூசப்பட்டு, பச்சை வண்ண போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது. ஏர்வாடி நகர் பகுதி முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பொழுதுபோக்கு கடைகள் விரிக்கப்பட்டிருந்தன. லேசான மழைப்பொழிவு இருந்தாலும் சந்தனக்கூடு விழாவை காண்பதற்காக நேற்று முன்தினம் மாலை முதல் இரவு மற்றும் காலை வேளை வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இனிப்புகள் மற்றும் சந்தன பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம், துணைத் தலைவர் முகம்மது சுல்தான், செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் தர்கா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்திருந்தனர். வருகிற மே 18ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.