குக்கே சுப்ரமண்யா கோவில் வருவாயில் முதலிடம் வகிக்கிறது
பெங்களூரு: கர்நாடக ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், குக்கே சுப்ரமண்யா கோவில், இம்முறையும் பணக்கார கோவில்கள் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.
இது குறித்து, குக்கே சுப்ரமண்யா கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகாவின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களில், குக்கே சுப்ரமண்யா கோவிலும் ஒன்றாகும். தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவில் உள்ள இக்கோவில், தோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்றது.
எனவே, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் வருவாயும் தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த, 15 ஆண்டுகளாக, பணக்கார கோவில் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.
கடந்த, 2024 – 2025ம் ஆண்டு, கோவிலுக்கு, 155.95 கோடி ரூபாய் வருவாய் வந்தது. 2025ன் ஏப்ரல் 1 முதல், 2026 மார்ச் 31 வரையிலான நிதியாண்டில், 167 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. வருவாய் பெறுவதில் இம்முறையும் முதல் இடத்தில் உள்ளது.
பக்தர்களின் காணிக்கை, வங்கியில் டிபாசிட் வைத்துள்ள தொகைக்கு கிடைத்த வட்டி, சத்திரம், கட்டடங்கள் வாடகை, விவசாய விளைச்சலை விற்றது என, பல்வேறு வழிகளில் கோவிலுக்கு, 167.89 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது.
கடந்த, 2006 – 07ம் ஆண்டில், குக்கே சுப்ரமண்யா கோவிலின் ஆண்டு வருவாய், 19.76 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2007 – 08ல், 24.44 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதன் மூலம், கர்நாடகாவின் பணக்கார கோவில் என்ற பெயர் பெற்றது. அதன்பின் வந்த ஆண்டுகளிலும், முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
கடந்த, 2008 – 09ல், 31 கோடி ரூபாய்; 2009 – 10ல் 39.51 கோடி ரூபாய்; 2011 – 12ல் 56.24 கோடி ரூபாய்; 2012 – 13ல் 66.76 கோடி ரூபாய்; 2013 – 14ல் 68 கோடி ரூபாய், 2014 – 15ல் 77.60 கோடி ரூபாய்.
கடந்த, 2017 – 18ல் 95.92 கோடி ரூபாய், 2018 – 19ல் 92.9 கோடி ரூபாய், 2023 – 24ல் 146 கோடி ரூபாய், 2024 – 25ல் 155 கோடி ரூபாய் வருவாய் பெற்றிருந்தது. இந்த வருவாய், 2025 –26ல் 167.89 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.