உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமைச்சருக்காக நடை அடைப்பில் மாற்றம்; திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய சர்ச்சை

அமைச்சருக்காக நடை அடைப்பில் மாற்றம்; திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய சர்ச்சை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., அமைச்சர் நிர்மல் குமார் நேற்று தரிசனம் செய்தார். அவருக்காக மதியம் கோயில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். சென்னையிலிருந்து நேற்று காலை மதுரை வந்த அமைச்சர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் நேற்று மதியம் 12:55 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். 


கோயில் முன் கட்சியினர் அவரை வரவேற்றனர். கோயிலுக்குள் சென்ற அமைச்சருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. துணை கமிஷனர் ஞானசேகரன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், ராமையா, கண்காணிப்பாளர் சத்தியசீலன் வரவேற்றனர். பின் அமைச்சர், ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோருடன் மூலஸ்தானம் சென்று தரிசனம் செய்து திரும்பினார். கோயிலில் வழக்கமாக மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை துவங்கும். மதியம் 12:45 மணிக்கு கோயில் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள மண்டபத்தில் உள்ள பெரிய கதவுகள் சாத்தப்படும். பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா காலங்களில் மட்டும் மதியம் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களிலும், திருமண நாட்களிலும் வழக்கம் போல் மதியம் 12:45 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்கு முன்பே கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியேறிய பின் நடைசாத்தப்படும். அமைச்சர் நிர்மல் குமார் நேற்று மதியம் 1:00 மணியளவில் கோயிலுக்குள் சென்றார். மதியம் 1:06 மணிக்கு மூலஸ்தானத்தில் ஆதரவாளர்களுடன் தரிசனம் முடித்து மதியம் 1:15 வெளியில் வந்தார். அதன் பின்பே கோயில் நடை சாத்தப்பட்டது. வழக்கமாக பக்தர்கள் மூலஸ்தானத்தில் தரிசனம் முடித்து மடப்பள்ளி மண்டபம், சஷ்டி மண்டபம் வழியாக வெளியில் அனுப்பப்படுவர். அமைச்சருக்காக பெரிய நிலை கதவு திறக்கப்பட்டு முன் பக்க வாசல் வழியாக வெளியே அனுப்பப்பட்டார். அமைச்சர் மூலஸ்தானத்தில் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. பக்தர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !