மரண பயத்தை போக்கும் பிரத்யங்கிரா தேவி அமாவாசை வழிபாட்டில் அறிவுரை!
பல்லடம்: மரண பயத்தையும் போக்குபவள்தான் பிரத்யங்கரா தேவி என, பல்லடம் அருகே நடந்த அமாவாசை வழிபாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
ல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரம் அதர்வண பத்ரகாளி பீடத்தில், அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. வரமிளகாய் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகத்தை துவக்கி வைத்து தத்தகிரி சுவாமிகள் பேசியதாவது : அமாவாசையன்று, நம் முன்னோர்களை திருப்திப்படுத்த வேண்டி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் குறித்து தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்? அதற்குத்தான், பிரத்யங்கிரா தேவி உள்ளார். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் என, எல்வாவுமாக இருப்பவள் அன்னை. நமது தோஷங்களை எல்லாம் நிவர்த்தி செய்யும் நாள் தான் அமாவாசை. சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நாள். அம்மனின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் உள்ளனர். மற்ற நாட்களை காட்டிலும் அமாவாசை தினம் காளிக்கு உகந்தது. பில்லி, சூனியம், ஏவல், செய்வினை உட்பட மரண பயத்தை போக்குபவள்தான் பிரத்யங்கிரா தேவி. தர்மத்துக்கு விரோதம் இல்லாமல், என்ன வரம் கேட்டு வருகிறார்களோ, அதை கொடுக்க காத்நிருக்கிறாள் அம்பாள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அமாவாசையன்று என்னை நீ தேடி வா, உன்னை நான் நாடி வருவேன் என்கிறாள் அம்பாள். தெரிந்து செய்யும் பாவங்களுக்கு அனுபவித்தே ஆக வேண்டும். தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மோட்சம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார். அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு யாகத்தை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.