உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனகை மாரியம்மன் கோவிலில் சோழவந்தான் எம்எல்ஏ ஜலப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன்

ஜெனகை மாரியம்மன் கோவிலில் சோழவந்தான் எம்எல்ஏ ஜலப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன்

சோழவந்தான்: த.வெ.க., தலைவர் விஜய் முதல்வரானதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் சோழவந்தானில் அக்கட்சி எம்.எல்.ஏ., கருப்பையா கிணற்று தண்ணீரில் மிதந்து ‘ஜலப்பிரதட்சணம்’ செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.


இவர் பல ஆண்டுகளாக அ.தி.மு.க.,வில் நிர்வாகியாக இருந்தார். 2011 சட்டசபைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றார். எம்.ஜி.ஆர்., ஜெ.,வின் ஒவ்வொரு  பிறந்தநாள், தேர்தல்களின் போது அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்காக ஜலபிரதட்சணம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் உடனே  த.வெ.க.,வுக்கு தாவினர். அங்கு அவருக்கு சோழவந்தான் தனித் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தேர்தலில் விசில் சின்னத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் வெற்றியில் விஜய் முதல்வராக வேண்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்தார். இன்று இக்கோயிலின் வைகாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நகரி ரோட்டில் தனியார் கிணறு ஒன்றில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.


அவர் கூறியதாவது: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் புண்ணியத்தால் சோழவந்தான் தொகுதியிலும், மாநில அளவிலும் வென்று முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சியமைத்துள்ளோம். கடைக்கோடி கிராமத்தில் பிறந்த என்னைக் கண்டெடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் விஜய், எனக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தற்காலிக சபாநாயகர் பதவியில் என்னை அமர்த்தினார். சாமானிய மக்களுக்கான எளிமையான ஆட்சியை அவர் வழங்குவார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !