காளையார்கோவில் சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்
சிவகங்கை, காளையார்கோவிலில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் இன்று வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா மே 20 அன்று இரவு 7:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. இன்று காலை 9:35 முதல் 11:15 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி, ஸ்தானிகம் ரத்தின காளீஸ்வர குருக்கள் தீபாராதனை காண்பித்தார்.
கொடிமரம் முன் தேவார, திருவாசக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் கோயிலில் எழுந்தருளிய பிரியாவிடையுடன் கூடிய சோமேஸ்வரர், சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு 9:00 மணிக்கு காமதேனு, வெள்ளி ரிஷபம், அன்னம், கிளி, யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவின் ஒன்பதாம் நாளான மே 29 அன்று அதிகாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சோமேஸ்வரரும், மற்றொரு தேரில் சவுந்திரநாயகியும், விநாயகர் சப்பரத்திலும் எழுந்தருள்வர். அன்று காலை 9:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான மே 30 அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.