திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடந்தது. ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா இன்று காலை 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், சிநேகவல்லி அம்மன் அலங்காரத்தில் இருந்தனர். முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு அபிேஷகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் மற்றும் நகர் வளர்ச்சி அறக்கட்டளை குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தினமும் இரவில் சுவாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 29 ல் தேரோட்டம் நடைபெறும்.